திருச்செந்தூர்:  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான எச்.சி.எல் நிறுவனம் ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளது. அத்துடன் தமிழகஅரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் ரூ.300 கோடி நிதியில் அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்தும், கோயிலில்ஆலய நிதிவளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்களுடன் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கைபேசி பெட்டகத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து 300 கோடி ரூபாய் செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதோடு கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக் கூடம் கட்டப்பட்டு வருகிறது.  கோயில் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் செய்யப்படும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடியில் வந்திறங்கிய அமைச்சர் சேகர்பாபு அங்கிருந்து காரில் திருச்செந்தூருக்கு வந்தார். கோயிலில் சரவணப் பொய்கை யானை குளியல் தொட்டி கட்டும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலின் உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செல்போன் பாதுகாப்பு அறையை திறந்து வைத்த அவர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 மினி பஸ்களை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் 25 ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதையடுத்து பெருந்திட்ட வரைவு, உபயதாரர் பணியை ஆய்வு செய்த அவர், யாத்ரி நிவாஸ் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆர்டிஓ புகாரி, இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கோயிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் வகையில் திருக்கோயிலுக்குள் பக்தர்கள் கைபேசியை கொண்டு செல்ல தடைவிதித்தும்,  திருக்கோயில் வளாகத்தில் கைபேசிகளை பாதுகாத்து,  மீள பக்தர்களுக்கு ஒப்படைக்கும் நடைமுறைகளை அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்திடவும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்  “பக்தர்கள் கைபேசிகளை திருக்கோயிலுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை.  மீறி கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். கைபேசி திரும்பி வழங்கப்பட மாட்டாது” என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை திருக்கோயிலின் நுழைவு  வாயில்களில் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திடவும், திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிற விபரத்தினை ஒலிப்பெருக்கி  மூலம் தினசரி ஒலிபரப்பு செய்திடவும்,  பக்தர்கள் கொண்டு வரும் கைபேசிகளை திருக்கோயில் வளாகத்திற்குள் பெற்று பாதுகாத்து வைத்திட ஏதுவாக பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்திடவும், கைபேசிகளை பெற்று திரும்ப வழங்கிடும் பணியினை செய்ய ஏதுவாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுத்திடவும்.

பக்தர்கள் கைபேசிகளைப் பெற்று அதற்கு அத்தாட்சியாக டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தவும், அதற்கு பாதுகாப்புக் கட்டணமாக ஒரு கைபேசிக்கு ரூ. 5/- தொகையினை வசூலிக்கவும், கைபேசிகள் பக்தர்களிடம் மீள வழங்கப்படும் போது டோக்கன் மற்றும் பக்தரின் அடையாளம் உறுதி செய்து வழங்கிட வேண்டுமெனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கைபேசிகளை பாதுகாத்து வழங்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு பெட்டகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.