பெங்களூரு
நடைபெற உள்ள 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இல்லை என அக்கட்சித் தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார்.
இன்று பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர்,
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம்”
என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து செயல்படப் போவதாக தேவகவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேவகவுடா அதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.