‘75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கிடையாது’ என்பது பா.ஜ.க.வின் பாலிசி.இதற்கு நேர் மாறான கட்சி தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்.
கவுடாவுக்கு இப்போது வயது-86.பார்க்காத பதவிகள் இல்லை. ஆனாலும் பதவி ஆசை விடவில்லை.
ஜனதா கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தேவகவுடா-1999-ல் மதச்சார்பாற்ற ஜனதாதளம் கட்சியை ஆரம்பித்தார்.அன்று முதல் அந்த கட்சி கவுடாவின் குடும்ப கட்சியாக இருந்து வருகிறது.
இதனை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய சித்தராமய்யா உள்ளிட்ட தலைவர்கள் வெளியேற்றப்பட-
இப்போது மதசார்பற்ற ஜனதா தளம் முழுக்க முழுக்க –கவுடா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
ஒரு மகன் குமாரசாமி- முதல்-அமைச்சராக இருக்கிறார்.இன்னொரு மகன்- ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சர்.மருமகள்- சட்டமன்ற உறுப்பினர்.
பேரன்களையும் பதவியில் அமர்த்தும் முஸ்தீபுகளில் இறங்கி உள்ளார்-கவுடா.குமாரசாமியின் மகன் நிகிலை –மாண்டியா மக்களவை தொகுதியிலும்,ரேவண்ணா மகன் பிரஜ்வாலை ஹசன் தொகுதியிலும் களம் இறக்க முடிவு செய்துள்ள தேவகவுடா- தானும் ஒரு தொகுதியில் போட்டியிட உத்தேசித்துள்ளார்.அது- மைசூருவாக இருக்கலாம்.
காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் தாத்தாவும், இரு பேரன்களும் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம்.அது சாத்தியமாகும் பட்சத்தில்-
ஒரே குடும்பத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் உள்ள குடும்பமாக – இந்தியாவிலேயே கவுடா குடும்பம் மட்டுமே இருக்கும்.
தேவகவுடா- 7 முறை எம்.எல்.ஏ,வாக இருந்துள்ளார்.7 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். முதல்வராக இருந்துள்ளார்.
ஒரு முறை நாட்டின் பிரதமர் நாற்காலியையும் அலங்கரித்துள்ளார். ஆயினும் பதவி மோகம் தணிய வில்லை.
மத்தியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில்- மீண்டும் பிரதமர் வாய்ப்பு தன்னை தேடி வரும் என்பது தேவகவுடாவின் நம்பிக்கை.
–பாப்பாங்குளம் பாரதி