மைசூரு:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தனது பேரனை ஹசன் தொகுதியில் அறிமுகப்படுத்திய தேவகவுடா,  தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. 28 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் 8 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளமும், மீதமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் நடிகர் அம்பரீஷ் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹசன் தொகுதியில், தேவகவுடா குடும்பத்தினர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.  தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல், குமாரசாமியின் மகன்  நிகில் குமார சாமி ஆகிய இருவரும் ஹசன் தொகுதியை கேட்டு பிடிவாதம் பிடித்தனர். இதில், ரேவண்ணாவின் மகனுக்கு ஹசன் தொகுதியை தேவகவுடா ஒதுக்கி உள்ளார்.

இந்த நிலையில்,  தேவகவுடா நேற்று ஹாசன் மாவட்டத்தில் உள்ள, தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.  அப்போது,  ஹசன் தொகுதியில் என் பேரன் பிரஜ்வல் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியவர், நான் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன். இனி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் யோசித்து வருகிறேன் என்று கூறியபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர் தேவகவுடா குடும்பத்தினர், இது அவர்களது குடும்பத்துக்கு புதிதில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.