மதுரை: தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவுநாளையொட்டி தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்றுமுதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் இன்றுமுதல் 4 நாட்களும், ராமநாதபுரத்தில் நாளை முதல் 3 நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

 அக்டோபர் 30ந்தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து அஞ்சலி செலுத்துவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்பதால் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு, டாஸ்மாக் கடைகள் அடைப்பு உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென் மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து வருகின்றனர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு. அதுபோல, மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் 4 நாட்கள் அடைக்கப்படுகின்றன. இன்று முதல் அக்.30-ம் தேதி வரை 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. இதற்கான உத்தரவு அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.28 முதல் அக்.30 வரை 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும். இதற்கான உத்தரவு நாளை (இன்று) வெளியிடப்படும்’ என்றார். சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு நாளை (அக்.27) டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. தேவர் ஜெயந்திக்காக எத்தனை நாட்கள் அடைக்கப்படுகின்றன என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதுபோல தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் வரும் வழிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் அடைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.