டெல்லி:  2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  இதற்கான அறிவிப்பை  பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா  வெளியிட்டுள்ளார். அதுபோல,  புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 17 சீசன்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதையொட்டி, வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந்த நிலையில்,  நடப்பாண்டுக்கான  (2025 ஐபிஎல் தொடர்) மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “ஐபிஎல் 2025 (இந்தியன் பிரீமியர் லீக்) சீசன் வருகின்ற மார்ச் 23 ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆனால், முதல் போட்டி எந்த அணிகளுக்கு இடையே நடைபெறும் என்பது தற்போது முடிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், மகளிர் பிரிமியர் லீக் போட்டி நடைபெறும் இடங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளது, விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

முன்னதாக, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப்பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தி னார். மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் செயலாளராக தேவஜித் சைகியா, பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் கடந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. அப்பொழுது முதல் போட்டி RCB மற்றும் CSK அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மே 26-ம் தேதி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் KKR அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியனை தட்டிசென்றது. இந்த நிலையில் இம்முறை இறுதிப் போட்டி கேகேஆரின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.