சென்னை: கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை  திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என  சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினார்.

அப்போது,  பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார்  கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார். கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர்,  மாற்று பாதை தொடர்பாக,விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். கொடைக்கானலுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன் முதலமைச்சரின் அனுமதி பெற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில்,  வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழகத்தில் உள்ள மக்கள் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்தவர்கள் குளுமையான இடங்களுக்கு மக்கள் செல்ல விருப்பப்படுவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய மலைப்பகுதி சுற்றுலா தலமாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரியாகும். அந்த வகையில் மலையின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு நாள் தோறும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக சாலைகளில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

எனவே கொடைக்கானலுக்கு ஏற்கனவே திண்டுக்கல் வழியாகவும், பழனி வழியாகவும் மலைக்கு செல்ல வழிகள் உள்ள நிலையில் புதிதாக மாற்று வழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் கொடைக்கானல் மலைக்கு மாற்று வழி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.