திருவூறல் ஜலநாதீசுவரர் திருக்கோயில்
இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்) என்று இத்தலம் பெயர் பெற்றது.
தலவரலாறு
தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தாம் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்ட, இந்திரன் கூறாது தங்க இயலாது எனக் காமதேனு மறுத்ததால் அதனைக் கட்டிப்போட முயன்றார்.
இதனால் கோபமுற்ற காமதேனு இட்ட சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதரது அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்குச் சாபவிமோசனம் வேண்டினார்.
இறைவனார், நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவைத்து அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபடச் சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற அதன்படி தீர்க்கதா செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தல இறைவனார் ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகின்றார்.
சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சிதருகின்றார்.மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே.
தக்கன் தலையைக் கொய்த தலம்
தக்கன் தலையைக் கொய்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). குசத்தலை என்றழைக்கப்படும் கல்லாற்றுக்கரையில் அமைந்த இத்தலத்தில் சம்வர்த்த முனிவர் வழிபட்டுள்ளார். நந்தியின் வாய் வழியே கங்கை நீர் வந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜகோபுரம்
ராஜகோபுரம் அமைக்கப்பட்டது 1543 ஆம் ஆண்டு. ராஜகோபுரம் அமைத்தவர் விஜயநகர மன்னர் வீரப்பிரதாப சதாசிவ ராயர்.
அமைவிடம்
திருவூறல், அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.