திருமறைச்சேரி அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகா ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயம்.
📌வேதங்கள் தவம் இயற்றிய தலம், சூரியன் பூஜிக்கும் தலம்-, ராகு வழிபட்டு நலம் பெற்ற தலம், பைரவரின் காணாமல் போன வாகனம் மீண்டும் கிடைக்க அருள்செய்த திருத்தலம்…எனப் பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டது திருமறைச்சேரி!
📌தென்னாடுடைய சிவனார் நாகநாதர் எனும் திருப்பெயர் ஏற்று, அம்பிகை சுந்தர நாயகியோடு கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலம், தற்போது வழக்கில் ‘மாராச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.
📌ஊர்ப் பெயர் மட்டுமல்ல, ஒருகாலத்தில் கோலாகலமாகத் திகழ்ந்த சிவனாரின் ஆலயமும் தன்னிலையில் மாற்றம் கண்டுவிட்டது.
📌கோயிலின் வரலாறு பற்றி ஊர்மக்களிடம் பேசியபோது, சுந்தர நாயகி சமேத நாகநாதப் பெருமானைப் பைரவர், சூரியன், ராகு ஆகியோர் பூஜித்து வரம் பெற்றதாகத் தெரிந்துகொண்டோம்.இந்தத் தலத்து இறைவனைச் சூரியன் வழிபட்டதற்கு சாட்சியாக இன்றைக்கும் பங்குனி மாதம் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் நாகநாதரின் திருமேனியில் படுவதாகச் சொல்கிறார்கள்.
📌ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலிமை குன்றி இருந்தால், இங்கு வந்து நாகநாதரை வழிபட்டால் போதும்; வலுக் குன்றிய சூரியனால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், ராகு தோஷம் உள்ளவர்களும் நாகநாதரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம் என்றும் நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.
📌இங்குள்ள நாகநாதரை வழிபட்டுத்தான், திருவாதவூரில் காணாமல் போன தன் வாகனத்தைப் பைரவர் திரும்பப் பெற்றார். எனவே, வாகனம் தொலைந்துபோனவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், தொலைந்துபோன வாகனத்தைத் திரும்பப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.! வாகனம் மட்டுமல்ல, வாழ்க்கையைத் தொலைத்தவர்களுக்கும் நல்வாழ்க்கையை மீட்டுத் தரும் நாதன் இவர்!
📌இந்தத் தலத்தில் ஒரு விசேஷம், சிவகரந்தை என்னும் அபூர்வ செடியாகும். மகா சிவராத்திரி காலத்தில் மட்டுமே பூக்கக்கூடிய சிவகரந்தை பூக்களை மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது மிகவும் விசேஷம்! மகா சிவராத்திரி முடிந்த சில தினங்களில் செடி வாடிவிடுமாம். இங்கிருந்து சிவகரந்தை மலர்கள் அடியார் பெருமக்களால் பல சிவாலயங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதாம்.
📌எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
திருத்துறைப்பூண்டி – திருவாரூர் சாலையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள மணலி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள திருமறைச்சேரிக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.