அறிவோம் தாவரங்களை – தேற்றா மரம்

தேற்றா மரம்.(Strychnos potatorum).

மலைகளில் காடுகளில் வளரும் சிறு மரம் நீ!

40 அடி உயரம் வளரும் இலையுதிர் மரம் நீ!

நற்றிணை, கலித்தொகை  முதலிய சங்க கால இலக்கியங்களில் இடம்பெற்ற பழமை மரம்!

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் தல மரம் நீ!

இல்லம், தேத்தாங் கொட்டை தேறு, சில்லம், கதலிகம், தேத்தா எனத் தொல்காப்பியமும்,  பிங்கலநிகண்டு நூலும் உன்னை வகைப்படுத்தி அழகு  பார்க்கும்!

சங்ககால மக்கள் சூடிய கார்காலப் பூ நீ !

தென் மாவட்டங்களின் பானைக் குடிநீரைத் தெளியவைத்துத் தரும் தேற்றான்கொட்டை நீ!

குட்டை மீன்களைப் பிடிப்பதற்குச் சக்கை, சாறு தரத் தக்க மரம் நீ!

வலியைப் போக்கவும் கபத்தை நீக்கவும் பழமும் விதையும் தரும் கொடைமரம் நீ!

சீத பேதி,வயிற்றுப்போக்கு, புண்,காயம், பிரமேகம்,வெட்டை , உட்சூடு, மூத்திர எரிச்சல் இவற்றைப் போக்கும் மருந்து மரம் எனப் ‘பதார்த்த குணபாடம் நூல்’ உன்னைப் பதமாய்ப்  புகழ்ந்துரைக்கும்!.

10 லி சேற்று நீரை (2.விதைகள்)  இரண்டே மணிநேரத்தில் சுத்த நீராய்த் தெளிய வைத்து தரும் சித்தமருந்து!.

நீரைத் தெளிய வைக்கும் தேற்றாங்கொட்டை  என உலக நீரியல் மாநாட்டில் வல்லுநர்கள் சான்றளித்த இயற்கை தந்த வரமே!

கரி படிந்த நீரையும் குடி நீராய் மாற்றும் கடவுள் கொடுத்த விதையே!

உடல்  இளைக்கவும் உடம்பைத்   தேற்றவும் லேகியம் தரும் கற்பகத்தருவே!

பக்க விளைவு இல்லாத பணச்செலவு இல்லாத  குடிநீரைச் சுத்தப்படுத்தும்  வடி நீர் விதையே!

நீவிர் விடியற்கால கதிரவன் போல் அழகாய் வாழிய! வாழியவே!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி

☎️9443405050.