டில்லி
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளோருக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்து, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைக்க, நேரடி வரி பணிக்குழு அமைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த ஆய்வுக்குழு, மத்திய அரசுக்குத் தாக்கல் செய்த அறிக்கையில், வருமான வரி விதிப்பு அடுக்குகளை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தவும், சில அடுக்குகளுக்கு வருமான வரி விகிதத்தைக் குறைக்குமாறும் பரிந்துரைத்தது
தற்போது ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விதிக்கப்படுவதில்லை என்னும் முதல் அடுக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் எனப் பரிந்துரைக்கப்பட்ட\து. தற்போது, 2.5 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 5 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த இரண்டாவது அடுக்கை, 2.5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாய் வரை விரிவுபடுத்துமாறும், வருமான வரி விகிதத்தை 10 சதவீதமாக நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
அது மட்டுமின்றி இரண்டாவது அடுக்கிற்கு 10 சதவீத வரி விகிதம் நிர்ணயித்தாலும், 5 லட்ச ரூபாய் வரை, ஏற்கெனவே உள்ள வரிக் கழிவுகளை முழுமையாக அளிக்குமாறும், இதன் மூலம் 5 லட்ச ரூபாய் வரை ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை ஏற்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 5 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அதை 10 சதவீதமாக மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாற்றத்தினால் இந்த அடுக்கில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு ரூ 10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதையும் இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதாவது 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள் என மூன்றாவது அடுக்கை ஏற்படுத்தி, வரி விதிப்பை 20 சதவீதமாகக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மூன்றாவது அடுக்கில் உயர் பிரிவில் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை மிச்சமாகும்.
இதற்கு அடுத்தபடியாக, 20 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களை 4ஆவது அடுக்காக நிர்ணயித்து 30 சதவீத வரியும், 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களை 5ஆவது அடுக்காக நிர்ணயித்து 35 சதவீத வரியும் விதிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. தற்போதுள்ள முறையில் இவர்கள் அனைவரும் 30 சதவீத வரி செலுத்தும் நிலையில், 4 மற்றும் 5 என மேலும் இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கும்போது, 2 கோடி ரூபாய்க்குள் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மிச்சமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள்
ரூ.2.5 லட்சம் வரை வரி கிடையாது
ரூ.2.5 லட்சம் முதல் – ரூ.5 லட்சம் வரை வரிச்சலுகை
ரூ.2.5 லட்சம் முதல் – ரூ.10 லட்சம் வரை 10% வரி
ரூ.10. லட்சம் முதல் – ரூ.20 லட்சம் வரை 20% வரி
ரூ.20 லட்சம் முதல் – ரூ.2.கோடி வரை 30% வரி
ரூ.2 கோடிக்கு மேல் – 35 % வரி
தற்போதைய வருமான வரி அடுக்கு
ரூ.2.5 லட்சம் வரை – வரி கிடையாது
ரூ.2.5 லட்சம் முதல் – ரூ.5 லட்சம் வரை 5% வரி
ரூ.5 லட்சம் முதல் – ரூ.10 லட்சம் வரை 20 % + 12,500 வரி
ரூ.10. லட்சம் மேல் – 30 % + 1,12,500 வரி