சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம் – இரண்டாம் பகுதி

சபரிமலையில் பெருவழியில் உள்ள கேந்திரங்கள் குறித்த இரண்டாம் பகுதி இதோ

 

இந்தப் பகுதியில் நாம் முதல் இரு கேந்திரங்களான எரிமேலி மற்றும் பேரூர் தோடு ஆகியவை குறித்துக் காண்போம்

1.எருமேலி

அத்தனை பக்தர்களும் கூடும் இடம் எருமேலி. மகிஷியைக் கொன்று வீசிய இடம் – மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்க வேண்டும். ஐயப்பன் போருக்கு வனம் புகுந்ததை நினைவு படுத்தும் முகமாகப் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது.

எருமேலியில் மேற்கு பகுதியில் கிராத ரூபத்தில் சாஸ்தா பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இங்குக் கிராத சாஸ்தாவை தியானித்து, அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்க வேண்டும். அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாகப் பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்ட வேண்டும்.

மசூதிக்குச் சென்று வணங்கும் வழக்கம் பண்டைய வழக்கம் இல்லை. (முன்பிருந்த வாபுரக் கோஷ்டமும் இப்போது காணப்படவில்லை… எனவே) கோட்டைப்படியில் மகாகணபதியையும் பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்ல வேண்டும்.

2. பேரூர் தோடு

 

தோடு என்றால் நீர்நிலை. பெரிய பாதையின் முதல் தாவளம் – தங்குமிடமும் இதுதான். இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரிய பாதைக்குள் நுழைய முடியும். கொட்டாரக்கரை ஹரிஹரய்யர் காலத்துக்கு முன்பு வரை, வெளிச்சப்பாடு விபூதி ப்ரஸாதம் தந்தால் மேற்கொண்டு யாத்திரையைத் தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டியது தான்.

யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பமார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர். வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும் – இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தரைத் தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

அடுத்த கேந்திரங்களைப் பற்றி இனி வரும் பகுதிகளில் காண்போம்.