அறிவோம் தாவரங்களை – நன்னாரி
நன்னாரி. (Hemidesmus indicus)
தென் ஆசியா உன் தாயகம்!
தரிசுகளில் வேலிகளில் காணக்கிடைக்கும் தங்கக்கொடி நீ !
நன்மை+நாரி=நன்னாரி. நல்ல மணம் பரப்புவதால் நீ நன்னாரி ஆனாய்!
இனிப்பு சுவையும் கசப்புச் சுவையும் கொண்ட இனிய கொடி நீ!
அங்காரிமூலி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம்,சுகந்தி, கோபாகு, கிருஷ்ணவல்லி, நீருண்டி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!
ஆயுர்வேதத்தில் நீ ‘அனாதமூலா’!
சீமை நன்னாரி, பெரு நன்னாரி, கரு நன்னாரி என மூவகைப் பெயர்களில் காணக்கிடைக்கும் முதன்மைக் கொடி நீ!
மூட்டுவலி, உடல் சூடு, தோல் நோய், வாதநோய், பித்தம், மேகநோய், ஒற்றை தலைவலி, செரிமானமின்மை, பால்வினை நோய், நீர்க்கடுப்பு, இருமல், இளநரை, கிரந்தி, சொறி,சிரங்கு, விஷக்கடி, குஷ்டம், காமாலை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
‘சலத்தோடு பித்தம் அதிதாகம் ……மென்மதுர நன்னாரி வேர்’ என அகத்தியர் குணபாடம் போற்றும் அற்புதக் கொடியே!
தேரையர் போற்றும் மூலிகைக் கொடியே!
சித்த மருத்துவத்தில் பயன்படும் சிறப்புக் கொடியே!
தைலம், லேகியம் தயாரிக்க பயன்படும் மருந்து கொடியே!
சர்ப்பத்துக்குப் புகழ்பெற்ற சத்துக் கொடியே!
மீன் வடிவ இலை உடைய மேன்மைக் கொடியே!
மணம் மிகுந்த வேர் தரும் மகிமைக் கொடியே!
இலை, பூ, காய், கொடி, வேர், பட்டை என எல்லாம் பயன்படும் நன்னாரி கொடியே!
புத்துணர்வை ஏற்படுத்தும் புதுமைக் கொடியே!
நீவிர் நலமுடன் வளமுடன் வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர்.
ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.
📱9443405050.