திருப்பதியில் முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியவர் யார் தெரியுமா?
திருப்பதி ஏழுமலையானுக்கு முதன் முதலாக முடி காணிக்கை வழங்கியது யார் என்பது தொடர்பான தகவல்கள் வரலாற்று நூல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. விரிவாக பார்க்கலாம்.
கலியுகத்தின் முடிவுரையை எழுதுவதற்காகவே பெருமாள் திருமலையில் அவதரித்தாக புராணங்கள் சொல்லுகின்றன. வரலாற்றின் தொன்மையையும், நிகழ் காலத்தின் புதுமையையும் கொண்டு பக்தர்களுக்கு திருமலையில் அருள் பாலித்து வருகிறார் ஏழுமலையான். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு முடிக்காணிக்கை வழங்குவது வழக்கம்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் அவருக்கு முடிக்காணிக்கை செலுத்துவார்கள். திருப்பதியில் லட்டுக்கு பிறகு முடிக்காணிக்கை செலுத்துவது தனி அடையாளம். ஏழுமலையானுக்கு முடிக்காணிக்கை செலுத்துவது தொடர்பாக வரலாற்று நூல்களை ஆராய நேரிட்டது. அப்போது, திருப்பதியில் முதன்முதலாக முடிக்காணிக்கை செலுத்தியவர் யார் என்பது தெரிய வந்தது. அதிலும் அவர் பெண் என்பது கூடுதலான தகவல்.
ஸ்ரீநிவாசன் தியானம் செய்ய தொடங்கினார். பல நாட்களாக அவரது தியானம் தொடர்ந்தது. இதனால் அவர் மீது புற்று வளர்ந்தது. இதை கவனித்த பசு, பகவான் ஸ்ரீநிவாசனின் தாகத்தை தீர்க்க அவருக்காக பால் சுரந்து வந்தது. இதை ஒருமுறை கவனித்து வந்த மேய்ப்பாளன், பசுவை விரட்டுவதற்காக கம்பை தூக்கி வீசியுள்ளான். அப்போது அது பகவான் ஸ்ரீநிவாசனின் தலை மீது விழுந்துள்ளது. இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்து, கேசம் சிதைந்தது.
அப்போது அவரை வழிபடுவதற்காக நீளாத்ரி மலையின் இளவரசி நீளா வந்திருந்தாள். தியானத்தில் சயனித்திருந்த பகவான் ஸ்ரீநிவாசனின் கேசம் கலைந்திருப்பதை அவள் பார்த்தாள். மேலும், தலையின் சிறுபகுதியில் முடி உதிர்ந்திருப்பதை கவனித்தாள். அவர் மீதான பக்தி காரணமாக, தன்னுடைய கேசத்தை அவள் வலிமையாக பிடுங்கி பெருமானின் தலையில் முடியில்லாத பகுதியில் ஒட்ட வைத்தாள். முடி ஒட்டவில்லை. உடனே முடி ஒட்டிக் கொள்ள வேண்டும் என நீளா வேண்டிய வுடன் கேசம் பகவான் ஸ்ரீநிவாசன் தலையில் ஒட்டிக்கொண்டது.
அப்போது, பகவான் ஸ்ரீநிவாசன் கண்விழித்து பார்த்த போது, தலையில் முடியில்லாமல் ரத்தம் சொட்டச்சொட்ட நீளா நின்றிருந்தாள். அவளது பக்தியை கண்டு அகமகிழ்ந்த பெருமான், நீளா வேண்டும் வரங்களை கோரினார். கலியுகத்தில் பெருமானை தரிசிக்க பலரும் வருவார்கள், அப்போது அவர்கள் முடி காணிக்கை வழங்கி வேண்டுதல் கோரினால், அவர்களது குறைகளை போக்கி நல்லருள் வழங்க வேண்டும் என நீளா வரம் கோரினாள்.
இதை பகவானும் வழங்கிய அருளினார். இதை பின்பற்றி தான் தற்போது திருப்பதிக்கு வரும் பக்தர்கள், பெருமானுக்கு முடிக்காணிக்கை வழங்கு கின்றனர். அதை ஏழுமலையானும் மானசீகமாக ஏற்றுக்கொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.