டில்லி

ரும் குடியரசு தினத்தன்று விவசாய போராளிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தலைநகர் டில்லியில் கிட்டத்தட்ட இரு மாதங்களாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.  விவசாயிகள் வேளாண் சட்டத்தை அவசியம் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு அதைப் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு வரும் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று ஒரு டிராக்டர் ஊர்வலம் நடத்த உள்ளது.  இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெறும் எனவும் எவ்விதமான எதிர்ப்பு பேச்சுகளும் இருக்காது எனவும் ஊர்வலத்தில் வன்முறை நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 50 கிமீ நீளமான இந்த ஊர்வலத்தில் ஸ்வராஜ் இந்தியா, அகில இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் கலந்து கொள்கின்றன. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருக்கும் டிராக்டர்களில் தேசியக் கொடி மற்றும் விவசாய சங்கக் கொடிகள் மட்டுமே இடம் பெற உள்ளன. எந்த ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிராக்டர் ஊர்வலம் மூலம் விவசாயிகளின் துயரை மற்ற பொதுமக்களுக்கு தெரிவித்து அவர்களின் ஆதரவைப் பெறுவதே முக்கிய நோக்கம் எனச் சங்கத்தினர் கூறி உள்ளனர்.   அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்காததால் இந்த ஊர்வலத்தை நடத்த உள்ளதாக விவசாய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் கூறி உள்ளனர்.