சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில்
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.
தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாகப் பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.  சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள்.  அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.
காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாகப் பெற்றிருப்பதாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.  அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதைப் பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தைப் பக்குவப் படுத்துவாள் என்பது நம்பிக்கை.
பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.  இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்துக் காமாட்சி அம்மனாகும்.
இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளைப் பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.   செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல்,  “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.   இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.
“உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.
இத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் உள்ளது.
இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமானவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
இத்தலத்தில் பூந்தேர், கிண்ணித்தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்த கோவிலில் உள்ளது போன்று இந்தியாவில் வேறு எங்கும், எந்த தலத்திலும் கிண்ணித் தேர் இல்லை.
தினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்புக் கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும்.
தினமும் இத்தலத்தில் மூன்று கால பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.  மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் இத்தலத்தில் கோலாகல பூஜைகள் நடத்தப்படும். அதுவும் காளி பிறந்த தினமான கார்த்திகை அமாவாசை தினத்தன்று காளி ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெறும்.
இத்தலம் தோன்றி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
காளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.