டில்லி

பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் பாரத் பந்த் நாடெங்கும் நடைபெறுகிறது.

பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு  நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   டில்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.   மத்திய அரசின் பிடிவாதத்தால் 11 கட்ட  பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.    சட்டத்தை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்த மத்திய பாஜக அரசு விவசாயிகள் கோரியபடி முழுமையாக ரத்து செய்ய மறுத்து விட்டது.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்தனர்.   இதற்கு நாடெங்கும் ஆதரவு எழுந்துள்ளது.  எனவே காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.    நாடெங்கும் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஆதரவுடன் இந்த முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

இதன் விவரம் வருமாறு :

தமிழகத்தின் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பாரத் பந்த் காரணமாகப் பஞ்சாப் -அரியானா எல்லையை முடக்கி ஷம்புவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘விவசாயிகள் போராட்டத்தின் பாரத் பந்த் அழைப்பைக் கருத்தில் கொண்டு, நாங்கள் சம்பு எல்லையை  மாலை 4 மணி வரை தடுத்துள்ளோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறினார்.

தஞ்சையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

பாரத் பந்த் காரணமாகக் கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.