அவுண்டா நாகநாதர் கோயில்
மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு சோதிலிங்கத் தலம் ஆகும்.
அவுண்டா நாகநாதர் கோயிலானது (நாகேஸ்வரம்) இந்தியாவின் பன்னிரண்டு சோதிலிங்கங்க தலங்களில் எட்டாவது இடமாக கருதப்படுகிறது, இது பக்தர்களின் முக்கியமான புனிதத் தலமாக உள்ளது. தற்போது உள்ள இந்தக் கோயிலானது 13ஆம் நூற்றாண்டில் தேவகிரி யாதவ மன்னர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. முதலில் இக்கோயிலானது பாண்டவர்கள் தங்கள் 14 ஆண்டு வனவாசத்தின்போது தருமனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோயிலானது இந்து சமயத்தின் ஒரு பிரிவினரான வர்க்காரிகளால் மதிக்கப்படும் புனிதர்களான நாம்தேவ், விசாபா கெகரா, ஞானேஷ்வர் ஆகியோரின் வாழ்க்கையுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது.
கோயில் அமைப்பு
இக்கோயில் நாற்புறமும் மதில்களால் சூழப்பட்டு, உள்ளே பரந்த இடம் கொண்டதாக உள்ளது. கிழக்கிலும் வடக்கிலும் வாயில்கள் உள்ளன, என்றாலும் வடக்கு வாயிலானது பெரியதாகவும் புழக்கத்தில் உள்ளதாகவும் உள்ளது. கோயிலானது 669.60 சதுர மீட்டர் (7200 சதுர அடி) பரப்பளவு கொண்டதாகவும், 18.29 மீட்டர் (60 அடி) உயரமுடையதாகவும் உள்ளது.
கோயில் வளாகத்தின் மொத்தம் பரப்பளவானது 60,000 சதுர அடியாக உள்ளது. சமய முக்கியத்துவத்துவ்வம் கோண்ட இந்தக் கோயிலானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. தற்போதைய கோயிலின் அடிப்பகுதியானது ஹெமத்பந்தி கட்டட பாணியில் உள்ளது, அதையடுத்த மேல்பகுதியானது பிற்காலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டதால். அது பேஷ்வா ஆட்சிக் கால பாணியில் உள்ளது.
கோயில் விமானமானது வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் உயரமாக சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது. விமானத்தின் கீழுள்ள கருவறையில் ஒரு மேடை மட்டுமே உள்ளது. கருவறையின் இடப்பக்க மூலையில் நான்குக்கு நான்கடி என்ற அளவில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றால் பூமிக்கு அடியில் உள்ள கருவறையில் நாகநாதர் லிங்க வடிவில் உள்ளார்.
அமைவிடம்
இத்தலம் மகாராட்டிரத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு செல்ல வைத்தியநாதர் கோயில், பரளியில் இருந்தும் பர்பானியில் இருந்தும் பேருந்துகள் உள்ளன. இத்தலத்தின் தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் சோண்டி என்ற தொடர்வண்டி நிலையம் உள்ளது.