அறிவோம் தாவரங்களை – தண்ணீர்விட்டான் கிழங்கு/சாத்தாவரி
தண்ணீர்விட்டான் கிழங்கு/சாத்தாவரி.(Asparagus racemosus)
பாரதம் உன் பிறப்பிடம்!
இந்தியா, இலங்கை இமய மலையில் காணப்படும் மூலிகை முள் செடி!
6 அடி வரை உயரம் வளரும் கொடி மூலிகை!
சரளைக் கற்கள், சாலை வேலிகள், மணல் கொண்ட மலையில் கிடக்கும் ஊசியிலைக் கொடி!
தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, வரி வரி, நாராயணி, உதக மூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி என விளங்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி!
சதம் என்றால் நூறு என்று பொருள்.வரி என்றால் நோய் தீர்க்கும் வழி என்று பொருள். நூறு நோய்களை நீ தீர்ப்பதால் சதாவரி என்றானாய்!
உன் விரல் வடிவ வேரில் நீரையும் உணவையும் சேமித்து வைக்கும் பூமிக்கிழங்கு நீ !
சித்த,ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதக்கொடி நீ!
இரப்பை,புண்,அஜீரணம், கருப்பை நோய்களைப் போக்கி, நரை திரை, மூப்பைத் தள்ளிப் போடும் நல் மருந்துக் கொடி!
புற்றுநோய்,மறதி,தாய்ப்பால் இன்மை,நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், எலும்புருக்கி நோய், கை கால் எரிச்சல், தாது பலவீனம், நீண்டநாள் காய்ச்சல், வயிறு எரிச்சல், ஆகிய நோய்களுக்கு நீ வரப்பிரசாத மருந்து!
”நீரிழிவைப் போக்கும்…. தண்ணீர்விட்டான்” என அகத்திய சித்தர் போற்றும் மகத்துவ மூலிகை நீ!
பெண்களின் நோய்களைக் குணப்படுத்துவதால் நீ ‘ராணிகளின் மூலிகை’ ஆனாய்!
ஆரோக்கிய வாழ்விற்குச் சாறு, லேகியம் தரும் வாசனைப்பூக்கொடியே!
தாய்ப்பாலைப் பெருக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கே!
தொட்டிகளில் வளரும் அலங்காரக் கொடியே!
இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட சிவப்பு நிறப்பழ பூங்கொடியே!
நீவிர் தீங்கனியும் தெளிநீரும் உள்ளவரை பாங்குடனே பல்லாண்டு வாழியவே!
நன்றி : -Prof. Dr. S. Thiyagarajan
Neyveli Township
☎️9443405050