அறிவோம் தாவரங்களை – வசம்பு

வசம்பு (Acorus Calamus)

தென்கிழக்கு அமெரிக்கா உன் பிறப்பிடம்!

ஐரோப்பா, ரஷ்யா, கனடா, இந்தோனேசியா, இந்தியா என எங்கும் வளரும் இனிய பூண்டு செடி நீ!

ஆற்றங்கரை ஏரிக்கரைகளில்  அழகாய் வளரும் மூலிகைச் செடி நீ!

3  அடிவரை உயரம் வளரும் மருந்துச் செடி நீ!

பெயர் சொல்ல மறந்து பிள்ளை வளர்ப்பான், பிள்ளை வளர்த்தி, உரைப்பான் எனப் பல்வகைப்   பெயர்களில் விளங்கும்  பல  பொருள் குறித்த ஒருசொல் கிளவி நீ!

காரச் சுவையும்  வெப்பத் தன்மையும் கொண்ட மருந்து செடி நீ!

தொற்றுநோய், சளி, பசியின்மை,   நெஞ்சுவலி, வயிற்றுவலி, ஆஸ்துமா, தோல் நோய்கள்,  நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி, காது வலி, பல்வலி, சிறுநீரகக் கோளாறு,  சீதபேதி, சிரங்கு, நீரிழிவு, நினைவாற்றல், சிறுநீர்ப்பை பிரச்சினை,  பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

தொற்று நோய்களை நீக்கி கால்நடைகளைக்  காக்கும் காவலனே!

சித்த மருத்துவத்தின் சிறந்த மூலிகையே!

விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துச் செடியே!

குழந்தைகளின் கைகளுக்கு அழகு சேர்த்து நோயை விரட்டும்  போர் வீரனே!

 நாட்டு  மருந்துக்கடையின் நாயகனே!

பாட்டி வைத்தியத்தின்  பரம்பரை மருந்தே!

குழந்தைகளைக் காக்கும் சஞ்சீவியே!

திக்குவாயைச் சரிப்படுத்தும் திவ்ய மருந்தே!

நீவிர் தென்பாண்டி முத்துக்கள் உள்ளவரை வாழ்க, வளர்க, உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📞:9443405050.