சென்னை

ரசுடைமையாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் இருந்த   பலதரப்பட்ட 8376 புத்தகங்கள் குறித்த விவரங்கள் இதோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றத் தமிழக அரசு அரசுடைமையாக்கி உள்ளது.   இதில் உள்ள அசையும் சொத்துக்களைக் கணக்கெடுத்த போது அங்கு 8376 புத்தகங்கள் இருந்துள்ளன.  இதில் பலதரப்பட்ட புத்தகங்கள் காணப்பட்டுள்ளன.  இவற்றில் ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா நூல் முதல் தமிழர்களின் திருமறையான திருக்குறள் வரை உள்ளன.

இந்த இல்லத்தின் முன்னாள் பணியாளர்களும், அவருடைய வீட்டுக்கு சென்று வந்தவர்களும் ஜெயலலிதா புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.  மேலும் அவர் தனது முதல் மாடி அறையில் வெகுநேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பார் எனவும் தன்னிடம் உள்ள புத்தகங்களுக்கு வரிசை எண் அளித்துப் பாதுகாத்து வந்ததாகவும் பலரும் கூறுகின்றனர்.

இது குறித்து முன்னாள் அரசு அதிகாரி ஒருவர்,”ஜெயலலிதாவின் வீட்டில் 75% புத்தகங்கள் ஆங்கில புத்தகங்கள் ஆகும். அத்துடன் பெரியார், அண்ணாதுரை, ஆகியோரின் புத்தகங்கள்,  திருக்குறள் , ஆதி சங்கராச்சாரியார் குறித்த புத்தகங்கள்,கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் உள்ளிட்ட தமிழ்ப் புத்தகங்களும் உள்ளன.   குறிப்பாக நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகம் சிறப்பு இடம் பெற்றிருந்தது” எனக் கூறி உள்ளார்

ஜெயலலிதா சுயசரிதைகள் படிப்பதில் விருப்பம் கொண்டர் என்பதால் ஆபிரகாம் லிங்கன், ரொனால்ட் ரீகன் உள்ளிட்ட பலரின் சுயசரிதை புத்தகங்கள் அவரிடம் உள்ளது.  இதில் இருந்து குறிப்புக்கள் எடுப்பதை ஜெயலலிதா வழக்கமாக்கொண்டுள்ளர்.   வீடு அதிக ஆடம்பரமாக இல்லை எனவும் ஜெயலலிதா கால்வலியால் அவதியுற்றதால் ஒரே ஒரு லிஃப்ட் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த இல்லத்தில் ஜெயலலிதாவுடன் 30 வருடங்களுக்கு மேலாக, சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி மற்றும் அவர் குழந்தைகள் வசித்துள்ளன்ர்.  ஜெயலலிதாவின் படுக்கை அறை பெரிய அளவில் இருந்தாலும் எளிமையாக இருந்துள்ளது.  சசிகலாவின் அறை சிறியது எனவும் அதில் ஸ்டேஷனரி, பெட்டிஷன், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

 ஜெயலலிதாவின் செயலராக வெகுநாட்கள் பணி புரிந்த கார்த்திகேயன், “ஜெயலலிதா ஒவ்வொரு புத்தக வெளியீட்டின் போதும் 3 பிரதிகள் வாங்கச் சொல்வார்.  அவற்றை வேதா நிலையம், சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் எனப் பிரித்து அனுப்புவது வழக்கமாகும். என்னை அவர் அடிக்கடி புத்தகங்கள் படிக்க வற்புறுத்தியும் நான் படித்தது இலை” என தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, “எனது 10 ஆம் வயதில் இருந்து நான் வேதா நிலையத்தில் வசித்து வந்தேன்.  எனது தந்தை மரணத்துக்குப் பிறகு நான், எனது தாய் இளவரசி, சகோதரர் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோர் அங்குச் சென்றோம். அவர் தினசரி 5 மணி நேரத்துக்கும் மேல் படிப்பார்  அங்கிருக்கும் ஆங்கில நாவல்கள் அவர் நடிகையாக இருந்த காலத்தில் வாங்கப்பட்டவை.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவின் படிக்கும் நேரம் வெகுவாக குறைந்து விட்டது.  அவர் மருத்துவமனையில் இருந்த போது நான் அவருக்கு அளித்த கடைசி புத்தகம் வேய்ன் டயர் எழுதிய விஷஸ் ஃபுல்ஃபில்ட் என்னும் புத்தகமாகும்.  அவர் பெங்களூர் சிறையில் இருந்த போது சி ராஜகோபாலாசாரியார் எழுதிய மகாபாரதம் தமிழ்ப் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். இந்த புத்தகம் அவர் இறுதியாகப் படித்த தமிழ்ப் புத்தகம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.