டில்லி
வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் நான்கு முக்கிய வழக்குகளில் தீர்பு வழங்க உள்ளார்.
நேற்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக இந்த தீர்ப்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றத்தின் பணி நாட்களாக உள்ளன. பல முக்கிய வழக்கு விசாரணைகள் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும் நள்ளிரவு முதல் விடிய விடியக் கூட நடந்திருக்கிறது.
ஆயினும், முதல் முறையாகத் தீர்ப்பு நாளை சனிக்கிழமையாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேர்ந்தெடுத்திருப்பது கூட வரலாற்று சிறப்புமிக்கதாகி உள்ளது. வரும் 17 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறும் நிலையில் இந்த ஒரு வாரத்துக்குள் மேலும் 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார் இது குறித்த விவரங்களைக் காண்போம்.
கடந்த ஆண்டு ரபேல் ரக போர் விமானக் கொள்முதலில் மோடி அரசு எந்த தவறும் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு 14ம் தேதி. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரித் தாக்கல் செய்த மனு மீது ரஞ்சன் கோகாய் அடுத்த வாரம் தீர்ப்பு அளிக்கிறார்.
பிரதமர் மோடியை ரபேல் வழக்கில் திருடன் எனக் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றவியல் கண்டன நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பும் அடுத்த வாரம் வழங்கப்படுகிறது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் என டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற பொதுச் செயலாளர் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதும் தீர்ப்பு அளிக்கிறது..
எனவே அடுத்த வாரம் முழுவதும் பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சம் இருக்காது என மக்கள் கூறி வருகின்றனர்.