மியான்மர்

மியான்மரில் ரோகிங்யா என்னும் இஸ்லாமிய பிரிவினர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக வரும் செய்திகள் பற்றிய குறிப்பு இதோ :

மியான்மர் புத்த மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும் அரசு ஆகும்.   ஆயினும் அங்கு பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.  மியான்மரின் வடக்கு பகுதியில் உள்ள ரகைண் மாவட்டத்தில் ரோகிங்யா என்னும் இஸ்லாமியப் பிரிவினர் வசித்து வருகின்றனர்.  இவர்களின் மூதாதையர் இந்தியா மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள்.  வங்க மொழி பேசும் இவர்கள்தான் மத வெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழந்து வருகின்றனர்.  கடந்த 2, 3 நாட்களில் மட்டும் சுமார் 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவைகளுக்கு மூல காரணம் 2012ல் நடைபெற்ற புத்த மத தீவிரவாதிகளுக்கும் ரோகிங்யா இஸ்லாமியர்களுக்கும் ரகைன் மாவட்டத்தில் நடந்த போராட்டமே ஆகும்.  அன்று தொடங்கிய வெறியாட்டம் இன்று வரை ரோகிங்யா மக்களின் மேல் தாக்குதலாக தொடர்ந்து வருகிறது.  மியான்மர் அரசின் ராணுவமும், ரோகிங்யா மக்களுக்கு எதிராகவே உள்ளது.  ராணுவத்தால் இளைஞர்கள், குழந்தைகள், என பலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

 

ராணுவத்தினருக்கு கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தும் உரிமையை அரசு வழங்கியது.  அதற்குப் பின்னரே இந்த கொலைகள் பெருமளவில் நடந்துள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள சோக்பரா என்னும் இடத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ரோகிங்யா இஸ்லாமியர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள பல பள்ளிகள், மசூதிகள், மதரசாக்கள், வீடுகள் ஆகியவை இடித்து நொறுக்கப்பட்டுள்ளன.   நாட்டை விட்டு புகலிடம் தேடி வங்காள தேசம் செல்ல எல்லைக்கு வந்த ரோகிங்யா மக்களுக்கு மற்றோர் பேரதிர்ச்சி காத்திருந்தது.  வங்காள தேச எல்லையை மியான்மர் அரசு மூடி விட்டது.  அதனால் அவர்களால் நாட்டை விட்டு செல்ல முடியவில்லை.  எல்லை மூடியதால் சுமார் 60000 ரோகிங்யா இஸ்லாமியர்கள் அங்கு தவித்துக் கொண்டு உள்ளனர்.

ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில், வங்காள தேசம், இந்தியா, சீனா ஆகிய மியான்மரின் அண்டை நாடுகள் இந்த கொலைகளை நிறுத்தும்படி அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.  இது குறித்து உலக மனித உரிமை ஆணையத்திடமும், ராணுவ தாக்குதலை நிறுத்துமாறு மியான்மர் அரசுக்கு ஆணை இடவேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.