கோலாலம்பூர்:
மலேசியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜகபக்சேவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்ததோடு, அதை செருப்பாலும் அடித்தனர்.
மலேசிய தலைநகர், கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையக் கட்டத்தில் ஆசிய அரசியல் கட்சிகளின் ஒன்பதாம் அனைத்துலக மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மலேசியா வந்தார்.
அப்போது பல்வேறு தமிழ் அமைப்புகளையும் சேர்ந்தவர்கள், மகிந்த ராஜபக்சவே மலேசியாவை விட்டு வெளியேறு என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். “இனப்படுகொலை செய்த. ராஜபக்சேவுக்கு அரசு மரியாதை தரக்கூடாது. அவரை உடனே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மகிந்த ராஜபக்சே தங்கியுள்ள ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், புத்ரா உலக வர்த்தக மையத்துக்குள் நுழையவும் முயற்சித்தனர்.
ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மகிந்த ராஜபக்சேவின் உருவபொம்மையும் மலேசியாவில் பல நகரங்களில் எரிக்கப்பட்டன. மேலும் ராஜபக்சே உருவபொம்மையை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர்.