திருவனந்தபுரம்:

கேரளாவில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, சுமார் 5 மணி நேரமாக ராகுலை சந்திக்க காத்திருந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்தான். இதுகுறித்த தகவல் ராகுலின் பார்வைக்கு கிடைத்த நிலையில், அந்த சிறுவனுடன் போன் மூலம் பேசி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி  இரண்டு நாட்களுக்கு முன்பு, கேரளாவின் கண்ணனூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர்பால் அன்புகொண்ட 7 வயது சிறுவன் நந்தன், ராகுலை காணும் ஆவலில், காலை 5 மணி முதலே கையில் ’எனக்கு மிகவும் பிடித்தவர்’ என்ற பதாகையுடன் தனது தந்தையுடன் காத்திருந்து ஏமாற்றமடைநத்ர்.

ஆனால், அன்றைய தினம், தேர்தல் பிரசாரம் மற்றும் மக்கள் கூட்டத்தால், அந்த சிறுவனை ராகுல் கவனிக்க வில்லை. இதுதொடர்பாக அந்த சிறுவனின் பெற்றோர், பேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது வைரலான நிலையில்,  கேரள காங்கிரசார் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் பார்வைக்கு சென்றது.

அதையடுத்து, அந்த சிறுவன் குறித்து வியந்த ராகுல், சிறுவன் நந்தனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சிறுவனின் பெற்றோர் தொலை பேசி எண் மூலம் தொடர்புகொண்டு, சிறுவன் நந்தனிடம் பேசினார்.

தன்னிடம் பேசுவது ராகுல்காந்திதானா என வியந்த சிறுவன், அது ராகுல் என உறுதியானது, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். இதனால் மிகவும் சந்தோஷமடைநத் சிறுவன்  ராகுலுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக் சமுக வலைதளத்தில்  புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளான்.