சென்னை: வெள்ளி தோறும் ஒரு பழங்குடி கிராமம்” என்ற அடிப்படையில் இந்த வெள்ளி முதல் கொடைக்கானலில் உள்ள அனைத்து பழங்குடி கிராமங்களை அரசின் அனைத்து துறை சார்பாக அந்தந்த கிராமங்களிலே சந்திக்க இருக்கிறோம் கொடைக்கானல் பகுதி துணைகலெக்டர் சிவகுரு அறிவித்து உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பேராவூரணிக்கு அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன். சிறுவயது முதலே ஊரின் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறையோடு செயல்பட்ட இவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து தனது கடினமான உழைப்பால் படித்து உதவி ஆட்சியராகப் பணிக்குச் சேர்ந்தவர். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட சிவகுரு, தனக்கு வரும் மனைவி ஒரு டாக்டராக இருக்க வேண்டும், அவர் தனது கிராமத்தில் தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று அறிவித்து, அதன்படி, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி என்பவரை திருமணம் செய்துகொண்டவர்.
இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்தவர் தற்போது கொடைக்கானலில் துணைஆட்சியராக பதவி வகித்து வருகிறார். தான் பணி செய்து வரும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வின் ஒளியேற்றும் வகையில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு வருவதுடன், அவர்களுக்கு பாசன வசதிகளையும் செய்து கொடுத்து பெரும் வரவேற்பை பெற்றவர். பல பள்ளிகளில் மரங்களை நட்டு மாணவ மாணவிகளிடையே மரம் நடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அதன்படி, வாரத்திற்கு ஒரு நாள் ‘வெள்ளி தோறும் ஒரு பழங்குடி கிராமம்” என்ற அடிப்படையில் இந்த வெள்ளி முதல் கொடைக்கானலில் உள்ள அனைத்து பழங்குடி கிராமங்களை அரசின் அனைத்து துறை சார்பாக அந்தந்த கிராமங்களிலே சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கொடைக்கானல் பகுதி பழங்குடியின மக்கள் விரைவில் சிறப்பான வசதிகளை பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.