சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளதால், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை, கடலூர், எண்ணூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி ,புதுச்சேரி, காரைக்கால், ஆகிய துறைமுகங்களில் மூணாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.
தென்கிழக்கு வங்க கடல் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவுகின்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கே, சென்னையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்காகவும் மையம் கொண்டிருக்கிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் , இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் மூணாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்த எச்சரிக்கையை அடுத்து இன்றைய தினமும் நாளைய தினமும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.