சென்னை: சென்னை அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது என்றும் அப்போது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கொட்டி வரும் கனமழையால், மாநகரமே தனித்தீவாக மாறி உள்ளது. பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதாலும், சாலை முழுவதும் தண்ணீரில் மிதப்பதாலும் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளதால், மக்கள் கடுமை யான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து தென் கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகில் கரையைக் கடந்து செல்லும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நகரும் வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் பலத்த தரைக் காற்று மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மழையைப் பொறுத்த வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக் கூடும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூரில் கன மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் உள்ளது.
இவ்வாறு கூறினார்.