சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் நாளை 12 மாவட்டங்களிலும் நாளை மறுதினம் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது நாளை மறுதினம் தமிழக கரையை நெருங்கக் கூடும்.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21, 22-ம் தேதிகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், அன்றைய தினம் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.