சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனை அடுத்து சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நேற்று (ஜூலை 19) காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றதாகவும், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (20.07.2024) ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மேற்கு-வடமேற்கே நகர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஷ்கரைக் கடந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் உள்ள சில துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கடலூர், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.