சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.

தற்போது வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.