சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுகவில், 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இந்த முறை மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதுமட்டுமின்றி, புதிதாக நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் களமிறங்கி உள்ளார். ஏற்கனவே மும்முனை போட்டி நிலவி வரும் தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி அல்லது 5 முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு என்று அறிவித்துள்ளதால், சிறு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை மனதில் நினைத்துக்கொண்டு, எந்த கூட்டணியில் சேருவது என அல்லாடிக்கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை இழுக்க தவெக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் காய்நகர்த்திக்கொண்டிருக்கின்றன.
ஆனால், திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக கூட்டணி தொடரும், அதிலுள்ள கட்சிகள் வெளியேறாது என்று கூறியிருப்பதுடன், தேர்தலை முன்னிட்டு, 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் , திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை ஆகிய துறை சார்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வவேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் உள்ளிட்டோர் மற்றும் துறை சார்பான செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்
[youtube-feed feed=1]