மதுரை:  பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், அதிகாரிகளின் மெத்தனத்தை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக் கைகள்  தொடர்ந்தால், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து வருவதாக தேனிi வீரபாண்டியை சேர்ந்த சரவணன்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப் படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது  சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனிசார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே, அவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்பட்ட  பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நடைபெற்றது. அப்போது, அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது குறித்த அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரி யார்? அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், தேனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிக்கு கேள்வி எழுப்பிய நிதிபதிகள், துறை அதிகாரிகள் இதுபோன்று மெத்தனமாக நடந்துகொண்டால்,  ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அமேலும், முறைகேடாக பத்திர பதிவு செய்த தேனி சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் (IG) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  22ந்தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.