சென்னை:

மிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதன் காரணமாக 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன்பிறகே சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகங்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு பரவி அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக வடசென்னை உள்பட மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் பரவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 8 வயது குழந்தை ஒன்று, நுங்கம் பாக்கத்தில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டெங்கு காய்ச்சல்  காரணமாக  சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – கவிதா தம்பதியரின் மகாலட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நடைபெற்ற சோதனையில் அந்த சிறுமிக்கு டெங்கு  இருப்பது உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த நிலையில், சிறுமியின் தம்பியான 2 வயது தினேஷுக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் “எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில்  டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.

இதையடுத்து தமிழக சுகதாரத்துறை அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவிறுத்தி உள்ளது.

மழை காரணமாக தண்ணீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்யும் இடங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்குமாறும், தண்ணீர் தேங்கியுள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

காய்ச்சல் என வருபவர்களுக்கு “இரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், தேவைப்படும்போது மருத்துவர்கள் நோயாளிகளை தாமதமின்றி உயர் மையங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பபட்டு உள்ளது.