சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த மாநில அரசு உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், தண்ணீர் தேங்காமல் தடுக்க பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடந்த 2020ஆம் ஆண்டு 2,410 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அனைவரும் குணம் அடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 6,039 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 150-க்கும்மேற்பட்டோர் சிக்குன் குனியாவிலும், 500-க்கும் அதிகமானோர் மலேரியாவிலும், 1,028 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 2,220 பேர்ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றுக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடப்பாண்டில், கடந்தாண்டை விட டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 1,025 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக கோவை, தேனி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி, சங்கரன்கோவில், மதுரையில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இதையடுத்து டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை, டெங்கு தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்தும்படியும், கொசு ஒழிப்பு, குடியிருப்பு பகுதிகளை சுகாதாரமாக வைக்கும் பணியும் மேற்கொள்ள அறிவுறுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறிய பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியாஉள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.