சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி ஒருவர் பலியான நிலையில், மேலும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபல அரசியல்வாதிக்கு சொந்தமான தனியார் கல்லூரி விடுதியில் தங்கிய இருந்த மாணவிகள்  பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப் பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் கொசுத்தொல்லை காரணமாக சென்னையில்  டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக  கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 7 மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே சிக்குன்குனியா காய்ச்சல் அதிக அளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில், தற்போது டெங்கு பரவலும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் கல்லூரி விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த விடுதியில் தங்கியிருந்த 7 மாணவர்களுக்கு டெங்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த பாரத்நகர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இதனிடையே, விடுதியில் தங்கி படித்து வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாணவி சரண்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகளை உட்கொண்ட போதிலும் காய்ச்சல் குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காய்ச்சல் அதிகமான நிலையில், அவரை விடுதி நிர்வாகத்தினர், கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

மாணவி சரண்யா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தது, விடுதியில் தங்கி படிக்கும் மற்ற மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 7 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அவர்களில் 4 மாணவர்கள் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற 3 மாணவர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்காக, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொசுக்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]