சென்னை,

த்திய அரசு  ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததினால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில்  இன்று காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், மனோகர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலை வர்கள் இளங்கோவன், தங்கபாலு, நடிகை குஷ்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து திருநாவுக்கரசர் பேசியதாவது,

அகில இந்தியா காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியால்தான் இன்று  ரூபாய் நோட்டு பிரச்சினை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.  அவர் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்ல முடியாமல்  பிரதமர் மோடி பாராளுமன்றத்துக்கு வருவதையே தவிர்த்து வருகிறார். இதன் காரணமாகவே பாராளுமன்றம் முழுவதுமாக முடங்கியது.

பணம் மதிப்பிழப்பு இந்தியாவில் சாத்தியம் இல்லை என்று அவர்களுடைய கட்சியினரே தெரிவித்த் உள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் மோடி தன்னிச்சையாக முடிவு செயல்படுத்தி இருக்கிறார்.

இதன் காரணமாக நாட்டு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தினமும் தினமும் 15 கோடி பேர் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரம் முன்பும் காத்து நிற்கிறார்கள்.

50 நாட்கள் பொறுத்திருங்கள்  எல்லாம் சரியாகிவிடும் என்று பிரதமர் கூறினார். ஆனால், என்ன வாயிற்று.  கருப்பு பணம் ஒழிந்து விட்டதா? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 50 நாட்களில் நிலைமை சீரடைந்து விட்டதா? நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்கும் போது, சாதரணை மக்களை வதைக்கும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி எடுத்துள்ளார்.

இவ்வாறு திருநாவுக்கரசு பேசினார்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். அவர் பேசியதாவது,

50 நாட்களில் கருப்பு பணம், கள்ளப் பணம், தீவிரவாதம், லஞ்சம் எல்லாவற்றையும் மோடி ஒழித்து விட்டாரா? தீவிரவாதிகள் பயன்படுத்துவது அமெரிக்க டாலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் தீவிரவாத தாக்குதல் நடக்கத்தான் செய்கிறது.

மோடி  எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினை.   அவர் பொய் சொல்வதில் மன்னன். இன்னும் எவ்வளவு நாள் கஷ்டப்பட வேண்டி இருக்கிறதோ?

மோடி,  தான் செய்த தவறை ஒத்துக் கொண்டு மக்கள் மன்றத்தில் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மேலும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த  அவர்களின் நிறமும் மாறாது. புத்தியும் மாறாது என்றார்.

தொடர்ந்து  குஷ்பு பேசும்போது,  “பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பெண்கள் மருத்துவ செலவுக்கு பணம் கூட கட்ட முடியவில்லை. மணிக்கணக்கில் பணத்துக்காக வரிசையில் நிற்கும் பெண்கள் கழிவறை கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதெல்லாம் மோடிக்கு எங்கே புரியப் போகிறது” என்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி எம்.எல்.ஏ., யசோதா, ஹசீனா சையத், ஜான்சிராணி, ரூபி மனோகரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மாணவர் அணி யஸ்வந்த்சாகர், இளங்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.