டில்லி,
மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை காரணமாக வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டி உள்ளது.
2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மோடியின் புகழ் போதாது என்றும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சமீபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்மட்டத் தலைவர்கள் உள்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின்போது, ஒரு நாள் கூட்டத்தில் பாரதியஜனதா சார்பாக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆ கியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்தது மற்றும் இழப்பு ஏற்பட்டது என்று நேரடியாக குற்றம் சாட்டினர்.
மேலும் பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் ஏழைகள் மற்றும் விவசாயிகள் இடையே நிம்மதி யின்மையை ஏற்படுத்தி விட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து, சாதாரண அடித்தட்டு மக்களும் விவாதிக்க தொடங்கி விட்டனர், நாங்கள் மக்களை சந்தித்தபோது, அவர்களின் கேள்விக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
எனவே, இதன் காரணமாக வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி கிடைப்பது கஷ்டம், மோடி அலையால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது என எச்சரிக்கை விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக, இனி வரும் காலங்களில் மக்களுக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட பாரதிய ஜனதா அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.