ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் : 200 மாணவர்கள் பணம் இழப்பு

Must read

மும்பை

பாரத ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் திட்டத்தால் மும்பை பள்ளி மாணவர்கள் இரண்டு வருடம் சேமித்த தொகை முழுவதும் இழந்துள்ளனர்.

மும்பை செம்பூர் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் இரண்டு வருடம் முன்பு மாணவர்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க வற்புறுத்தி உள்ளனர்.   மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க பள்ளி நிர்வாகம் சொல்லி உள்ளது.   அந்த வங்கி அரசுடையாக்கப்பட்ட வங்கி என்பதுடன், அந்த சமயத்தில் குறைந்த பட்சத் தொகை இவ்வளவு வைத்தாக வேண்டும் என எதுவும் வரைமுறை இல்லை என்பதாலும் ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்கி உள்ளனர்.

ஆனால் ஸ்டேட் வங்கி மெட்ரோ நகரங்களில் குறைந்த பட்சமாக ரூ.5000 கணக்கில் இருக்க வேண்டும் எனவும் தவறினால் மாதா மாதம் அபராதம் வசூலிக்கப் படும் என அறிவித்தது.    அதனால் இங்கு கணக்கு துவக்கிய 200 மாணவர்கள் தாங்கள் இரண்டு வருடமாக சேமித்த பணத்தை அபராதமாக பிடிக்கப்பட்டதால் கணக்கில் ஒரு பைசா கூட மிஞ்சாமல் அனைத்து சேமிப்பையும் இழந்துள்ளனர்.

இது குறித்து இந்த சேமிப்பை மாணவர்களிடையே ஊக்குவித்த பிபிஷன் ஷிண்டே என்னும் ஆசிரியர், “இங்கு நிறைய மாணவர்கள் உதவித் தொகை பெறுகிறார்கள்.  அந்தத் தொகை சேமிப்பு கணக்கு இருப்பதால் நேரடியாக அவர்கள் கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என எண்ணினோம்.  அது தவிர இங்குள்ள குழந்தைகளில் பலர் குடிசை வாசிகள்.   அவர்களுக்கு வங்கியை தவிர பாதுகாப்பான இடம் வேறெதுவும் இருக்காது.  நாங்கள் உள்ளூர் ஸ்டேட் வங்கியை அணுகிய போது அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து 200 கணக்கு துவங்கி தந்தனர்.  ஆனால் இப்போது நடந்தது மிகவும் வருந்தத்தக்கது” என கூறினார்.

இந்த நடவடிக்கையால் பணம் இழந்த மாணவர்கள் அனைவருமே ஏழைகள்.  அவர்களால் இது  போல முன்னறிவிப்பின்றி தங்கள் பணத்தை இழந்ததை ஒப்புக் கொல்ளக் கூட முடியவில்லை.   சிறு பண இழப்பே அவர்களால் தாங்க முடியாத நிலையில் இருக்கும் போது சேமிப்பு அனைத்துமே இழந்ததில்  மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இது குறித்து அந்த வங்கியின் கிளை மேலாளர் மிஸ்ரா, “இதே போன்ற புகாருடன் எங்களிடம் பல வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.   இந்த திட்டம் அமுலாக்கப்படும் முன்பே அவர்கள் தங்கள் கணக்கை முடித்திருக்க வேண்டும்.  இப்போது ஒன்றும் செய்ய இயலாது.  இப்போதும் உடனடியாக கணக்கை முடிப்பவர்களுக்கு இந்த மாதத்து அபராதத் தொகை பிடிக்க மாட்டோம்.   இது ஏழைகளுக்கு பெரும் அதிர்ச்சி என எங்களுக்கும் தெரிகிறது.   அவர்கள் இந்த கணக்கை முடித்துவிட்டு, ஜன் தன் அக்கவுண்ட் ஆரம்பிக்கலாம்.  அதுதான் ஒரே வழி” என தெரிவித்தார்.

பல தரப்பட்ட மக்களும் இந்த குறைந்த பட்சம் ரூ. 5000 என்பதற்கு மாபெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தி இந்த அபராதத் தொகை வசுலிப்பதை நிறுத்த வேண்டும் என 2 லட்சம் கையெழுத்துடன் மனு ஒன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இருந்தும் இதுவரை அபராதம் வசூலிப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது.   கடந்த மூன்று மாதம் மட்டும் ஸ்டேட் வங்கி ரூ.235 கோடி இந்த அபராதம் மூலம் லாபம் ஈட்டி உள்ளது.

More articles

Latest article