டெல்லி:
மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பளைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய ருபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் மார்ச்- 31ம் தேதி தகுந்த விளக்கம் அளித்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
மார்ச் 30ம் தேதிக்கு பிறகும் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், 50 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிப்பது என்றும், இதற்காக அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது சிறைதண்டனை என்ற முடிவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பழைய ரூபாய் நோட்டுக்கான அவசர சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ரூ. 500, 1000 நோட்டுக்கள் வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டும். 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டடுள்ளது.