திருவனந்தபுரம்: “மோடியின் “நோட்டு செல்லாது” அறிவிப்பால் கடந்த 55 நாட்களில் கேரளாவுக்கு சுற்றுலா துறை மூலம் வரும் வருவாயில் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுளளது” என்று கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்தியஅரசு தடை செய்தபின், ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக கேரளாவுக்கு வரும், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
வெளிநாட்டு பயணிகள் வருகை 10 முதல் 15 சதவீதமும், உள்நாட்டு பயணிகள் 20 முதல் 30 சதவீதமும் குறைந்துவிட்டது. இதனால், மாநில அரசுக்கு இந்த 55 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நோட்டு தடை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதை எதிர்கொள்ளும் விதமாக முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமல்லவா. அதை மத்திய அரசு செய்யவில்லை. விமானநிலையத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு போதுமான இந்திய ரூபாய் விநியோகம் செய்யப்படவில்லை.
இதனால், பயணிகள் வருகை பெருமளவு பாதிக்கப்பட்டது. மோடி அரசின் அகம்பாவ குணத்தால், மாநில அரசால் பயணிகளுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் மிகக்குறைந்த அளவே வந்தனர். அப்படி வந்தவர்களாலும் குறைந்த அளவே செலவு செய்ய முடிந்தது.
ஆகவே உள்ளூர் வர்த்தகம் மிகவும் குறைந்துவிட்டது. உதாரணமாகச் சொல்வதென்றால், கேரளா சுற்றுலாவில் மிக முக்கியத்துவம் பெறுவது, ஆழப்புழாவில் உள்ள படகுவீடுகள். வருடம் முழுதும் இங்கே பயணிகள் வந்தவண்ணம் இருப்பார்கள். ஆனால். தற்போது அந்த சுற்றுலாத்தலம ்களையிழந்து காணப்படுகிறது” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
Demonetization has affected kerala tourism. 55 days of demonetisation has incurred loss of rs.1000 crores to the state of Kerala.