வாடிக்கையாளர்களின் பேக்கேஜ்களில் இருந்து விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை திருடி அதற்கு பதிலாக கற்களை வைத்து ஏமாற்றிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் டெலிவரி ஏஜென்ட் உட்பட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கற்கள் கொண்ட பார்சல் டெலிவரி செய்யப்பட்டது குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களை அடுத்து அந்த ஆன்லைன் நிறுவனத்தின் மேலாளர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த அரும்பாக்கம் போலீசார் டெலிவரி ஏஜென்ட்களில் ஒருவரான ஓட்டேரியை சேர்ந்த தினேஷ் (20) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டில் வாடிக்கையாளர் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி அந்த பார்சலில் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களைத் திருடிக்கொண்டு அதற்கு பதிலாக கற்களை வைத்து பார்சலை மீண்டும் கிடங்கிற்கு கொண்டு சென்று வைத்துள்ளார்.

பார்சலில் இருப்பது கல் என்பது தெரியாத வேறு டெலிவரி ஏஜெண்ட் அடுத்த முறை அதை வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருடிய செல்போன் மற்றும் மடிக்கணினிகளை மலிவு விலைக்கு விற்றதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தினேஷின் கூட்டாளியான அஜித் என்பவரும் கைது செய்யப்பட்டார் அவர்களிடம் இருந்து 13க்கும் மேற்பட்ட திருட்டுப் பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.