டெல்லி: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தலைநகர் டெல்லியில் இன்று இரவு முதல் 26ஆம் தேதி காலை வரை முழுஊரடங்கு அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு டெல்லியில் 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று இரவு 10 மணி முதல், வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்,.
அடுத்த 6 நாட்களில் நோயாளிகளுக்கான படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தவர், மேலும் 6 நாட்களுக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய தேவை ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்பதால், நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடரும். திருமணங்களை 50 பேர் மட்டுமே கொண்டாட முடியும், அதற்காக தனித்தனியாக பாஸ் வழங்கப்படும். விரிவான உத்தரவு விரைவில் வழங்கப்படும்” என்று கெஜ்ரிவால் கூறினார்.