டெல்லி:

லைநகர் டெல்லியில் கடந்தமாதம்  சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் டெல்லி தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள சிஏஏ சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஷாகின்பாக்  கடந்த 3 மாதங்களாக   குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல் வடகிழக்கு டெல்லியிலும் கடந்த மாதம் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, சிஏஏக்கு ஆதரவாளர்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், வீடுகள், வாகனங்களுக்கு தீ வைத்தும் வெறியாட்டம் ஆடினர். இதில், 500க்கும் மேற்பட்டோர்  காயமடைந்த நிலையில், இதுவரை  53 பேர் பலியாகி உள்ளனர். இந்த போராட்டங்களுக்கு பல சமூக அமைப்புகள் நிதி உதவி செய்தும், வன்முறையை தூண்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் பாஜக தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதும் வெளியானது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்துக்கு நிதி உதவி செய்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் ஆகியோர் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.