புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று (பிப். 15) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதுடெல்லி ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை பிப்ரவரி 26ம் தேதி வரை நிறுத்தி வைக்க வடக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்களில் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மற்றும் இருக்கைக்கு ஏற்ப டிக்கெட்டுகள் வழங்கப்படுவதற்கு பதிலாக கேட்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

தவிர, பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை இஷ்டம் போல் அச்சிட்டு கொடுத்து பணம் ஈட்டி வரும் ரயில்வே நிர்வாகம் அந்த டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு ரயில்களில் பயணம் செய்வது குறித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இதனால், டிக்கெட் வைத்திருப்பவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகள் தவிர, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏ.சி. பெட்டிகள் என சகல பெட்டிகளில் ஏறி பயணம் செய்வதுடன், கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்கு கழிவறைக்கு கூட செல்ல முடியாத வகையில் அசௌகாரியத்தை ஏற்படுத்துகின்றனர்.

குறிப்பாக வடமாநிலங்களிலும் வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு வரும் ரயில்களிலும் இந்த கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

தற்போது கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் வடமாநிலங்களில் பல்வேறு ரயில் நிலையங்களில் இதுபோன்ற அநாகரீக செயல்கள் அதிகரித்து வருவதுடன் எதைச் செய்தாவது ரயிலில் ஏறி கங்கைக்கு சென்று தங்கள் பாவத்தை போக்க ஆயிரக்கணக்கானோர் கிளம்பியுள்ளனர்.

இந்த நிலையில் மகாகும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சனிக்கிழமையன்று புதுடெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட நிலையில் ரயில் வருகை குறித்த தகவலால் முண்டியடித்த கூட்டத்தில் பலர் கீழே தடுமாறி விழுந்தனர்.

இரவு 10 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் கூட்டத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் சி.ஆர்.பி.எப். வீரர்களும் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையத்தின் அனைத்து நுழைவாயிலிலும் டிக்கெட் பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் உள்நுழைவை கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், புதுடெல்லி ரயில் நிலையத்தில் வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்த வடக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.