டில்லி:

டில்லியில் விதிமீறல் மற்றும் உருமாற்றம் கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு உத்தரவிட்டது. இதையடுத்து டில்லியில் நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை டில்லி மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளது. இதனால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடி, எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ‘‘கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை நிறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும். இச்சட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். கடைகளுக்கு சீல் வைப்பதால் பலர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்வு காண வேண்டும். இப்பிரச்னை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக எதிரொலிக்க வேண்டும். இதற்கு மசோதா தாக்கல் செய்ய வலியுறுத்த வேண்டும். இதற்காக தங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சீல் வைக்கும் நடவடிக்கையை மார்ச் 31ம் தேதிக்குள் நிறுத்தவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று கெஜ்ரிவால் நேற்று எச்சரித்திருந்தார்.