டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
காற்று மாசு காரணமாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளி கல்லூரிகளை கடந்த வாரம் திறந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தன்மை மிகவும் மோசமடைந்து சிறுவர்கள் பலரும் சுவாச கோளாறு காரணமாக பாதிக்கப்படுவதுடன் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தி வரும் நிலையில் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் பள்ளி கல்லூரிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாளை முதல் டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் நடத்த மற்றும் டீசல் லாரிகள் நுழைய தடை நீடிக்கும் என்று கூறிய டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொண்டதுடன் அதற்காக இயற்கை வாயு மூலம் இயங்கும் 700 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் தூசு பறக்காமல் இருக்க தீயணைப்பு வண்டிகள் மூலம் நகர் முழுவதும் தண்ணீர் தெளிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.