டெல்லி: காலையில் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டபோது, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா அணிந்திருந்த 4 பவுண் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த திருடன் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், அவரிடம் தங்கச் செயின் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்ள டெல்லி சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. சுதா, கடந்த 4ந்தேதி அன்று நடைபயிற்சியின்போது நடைபயிற்சி சென்றிருக்கிறார். அப்போது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார். இதில் லேசான காயமடைந்த சுதா, இந்த திருட்டு தொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். இந்த செயின் பறிப்பு சம்பவத்தின் போது தனது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், தனது ஆடைகள் கிழிந்ததாகவும் எம்.பி. குற்றம் சாட்டினார்.
டெல்லியின் முக்கிய பகுதியான “உயர் பாதுகாப்பு மண்டலம்” என்று கருதப்படும் பகுதியில், வழிப்பறி நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 24 குழுக்களைத் திரட்டி, 1,500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஸ்கேன் செய்து, 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்தது. சாணக்யபுரி, சரோஜினி நகர் மற்றும் ஆர்.கே. புரம் ஆகிய இடங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த நிலையில், சுதாவின் தங்கச் செயினை பறித்துச் சென்ற திருடனை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து சுதா எம்.பி.யின் செயினும் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குற்றத்திற்கு அவர் பயன்படுத்திய திருடப்பட்ட ஸ்கூட்டர், எம்.பி.யின் 30.90 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு மொபைல் போன்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது சந்தேக நபரின் உடைகள் மீட்கப்பட்டுள்ளன” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவர் வண்ணமயமான முழு கை சட்டை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்தார், மேலும் எம்.பி.யை குறிவைப்பதற்கு முன்னும் பின்னும் மிக வேகமாக கருப்பு ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் தெற்கு டெல்லியின் மோதி பாக் பகுதியை நோக்கி தப்பிச் செல்வதைக் காண முடிந்தது. குற்றம் சாட்டப்பட்ட சோஹன் ராவத் நேற்று (புதன்கிழமை ) கைது செய்யப்பட்டார்.