டில்லி
ஒரு பெண்ணை சட்டசபை வளாகத்தில் தாக்கியதாக டில்லி போலீஸ் ஆம் ஆத்மி கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் வழக்கு பதிவு செய்துள்ளது.
டில்லி காவல் துறையிடம் ஒரு பெண் அமானதுல்லா கான், சோம்நாத் பாரதி, ஜெர்னாயில் சிங் ஆகிய 3 ஆம் ஆத்மி சட்ட மன்ற உறுப்பினர்கள் டில்லி சட்டசபை வளாகத்தில் தன்னை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியதாகவும், கண்டபடி அடித்து உதைத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர் கூறியதாவது :
”நான் கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று சட்டமன்ற நிகழ்வுகளைக் காண சட்டசபை வளாகத்துக்கு சென்றிருந்தேன். பார்வையாளர் அனுமதிச்சீட்டு கிடைக்காததால், நான் வாசலில் நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் அங்கு வந்து என்னுடன் கைகலப்பில் ஈடுபட்டனர். என்னை தகாத வார்த்தைகள் சொல்லி திட்டி, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று தாறுமாறாக அடித்து உதைத்தனர்.” என தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் மேல் விசாரணை செய்த போலிசார், 3 எம் எல் ஏக்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகர்கள் இதனை மத்திய அரசின் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என விமரிசித்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததிலிருந்து கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் பல்வேறு வழக்குகள் பதிந்திருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும் இது போல பதியப்படும் வழக்குகள் யாவும் போலி என்பதால் நீதிமன்றம் தள்ளுபடி செய்வது வழக்கமான ஒன்று எனவும் தெரிவித்தனர்.