டில்லி
தற்போதைய வடமேற்கு டில்லி தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் உதித் ராஜ் காங்கிரசில் இணைந்தார்.
வடமேற்கு டில்லி மக்களவை தொகுதி உறுப்பினரான உதித் ராஜ் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக வன்கொடுமை சட்டத் திருத்தத்தை உச்சநீதிமன்றம் கொண்டு வந்த போடு அதை உதித் ராஜ் எதிர்த்து போராடினார்.
அத்துடன் சபரிமலை உள்ளிட்ட வேறு சில விவகாரங்களிலும் இவர் கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இவருடைய நடவடிக்கைகளால் கட்சி நிர்வாகம் இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதை ஒட்டி மக்களவை தேர்தல் வேட்பாளராக இவரை தேர்வு செய்யாத பாஜக இவருக்கு பதில் பஞ்சாபி சூஃபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ன்ஸ் என்பவரை வேட்பாளாராக அறிவித்தது. இதனால் உதித் ராஜ் கட்சி மீது கடும் கோபம் கொண்டார்.
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உதித் ராஜ் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மக்களவை தேர்தல்கள் நடைபெறும் வேளையில் இது போல மக்களவை உறுப்பினர் கட்சி மாறியது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.